புதன், 14 பிப்ரவரி, 2018


படத்திறப்பு அரசியலில் ஒரு தப்புக் கணக்கு
தெருவிளக்கு அ. குமரேசன்


மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் சபைகளாகிய நாடாளுமன்ற மும் மாநிலச் சட்டமன்றமும் நீதிமன்றத்தை விட அதிகாரம் வாய்ந்தவை. ஆனால், சட்டமன்ற வளாகத்தில் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா படம் இவ்வளவு அவசரமாகத் திறக்கப்பட்டதில் அந்த அதிகாரம் தவறாகப் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. ஒரு மோசமான முன்னுதாரணம் ஏற்படுத்தப்பட்டிருக்கிறது.அந்த அடிப்படையில்தான் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் பல்வேறு கட்சிகளும் படத்தைத் திறக்க எதிர்ப்புத் தெரிவித்தன. அதேவேளையில் இது சட்டநுணுக்கப்படி சரியா தவறா என்று மட்டும் பார்க்கக்கூடிய பிரச்சனையல்ல. அரசியல் அறம் சார்ந்த பிரச்சனை இது.ஜெயலலிதா உள்ளிட்டோர் மீதான வழக்கு மக்களுக்காக ஒரு அரசியல் போராட்டம் நடத்தியதற்காகப் போடப்பட்ட வழக்கு அல்ல. ஒரு பொருளாதாரக் குற்றம் நடந்திருக்கிறது, அதற்கு அவர் தனது அதிகாரத்தைப் பயன்படுத்தினார் என்பதுதான் வழக்கு. அதில்தான் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது. ஆகவேதான் சட்டமன்ற அரங்கில் அவருடைய படம் திறக்கப்பட்டதற்கு எதிர்ப்பு, அதை நீக்க ஆணையிடக்கோரி உயர்நீதிமன்றத்தில் இப்போது புதிய வழக்கு.அவர் மரணமடைந்துவிட்டதால் அவருக்குத் தண்டனை அறிவிக்கவில்லை என்று உச்சநீதிமன்றம் கூறியிருப்பதை ஒரு வாதமாக்குகிறார்கள். அவர் இறந்தபோது, கர்நாடக நீதிமன்றத்தில் நீதிபதி குமாரசாமி அவர் குற்றவாளியல்ல என்று தீர்ப்பளித்திருந்ததுதான் நடப்பில் இருந் தது, ஆகவே படத்தைத் திறப்பதில் தவறில்லை என்றொரு வாதத்தையும் முன்வைக் கிறார்கள்.இப்படிப்பட்ட வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்ட ஒருவர் இறந்துவிடுகிறார் என்றால், அவர் மீதான குற்றச்சாட்டு தள்ளுபடியாகிவிடும் என்று நாட்டின் அரசமைப்புச் சட்டம் எந்த இடத்திலும் சொல்லியிருப்பதாகத் தெரியவில்லை.அவர் ஒரு பெண் என்ற முறையில் படத்திறப்பை ஆதரிப்பதாக பாஜக தலைவர் தமிழிசை சௌந்திரராஜனும், காங்கிரஸ் கட்சியின் அதிகாரப்பூர்வ முடிவை மீறி சட்டமன்ற உறுப்பினர் விஜயதாரிணியும் வேறு சிலரும் கூறியிருக்கிறார்கள். நீதிமன்றம் ஆணா பெண்ணா என்ற அடிப்படையில் வழக்கை விசாரித்துத் தீர்ப்பளிக்கவில்லை. முதலமைச்சராக இருந்தவர் என்ற அடிப்படையில்தான் தீர்ப்பளித்திருக் கிறது. ஆகவே, பெண்ணுரிமைக்கான குரலை இந்தப் பிரச்சனையோடு முடிச்சுப் போடுவது, பெண்ணுரிமைக்காகப் போராடி வருகிற பெண்கள், ஆண்கள் அனைவரையுமே ஒற்றை வரியில் கொச் சைப்படுத்துவதாக இருக்கிறது.சட்டமன்ற அரங்கில் பெரியார், காமராசர், அண்ணா உள்ளிட்ட தலைவர்களின் படங்கள் வைக்கப்பட்டுள்ளன. அந்தத் தலைவர்கள் பற்றிய வரலாற்றுக் குறிப்புகள் சட்டமன்றத்தில் வைக்கப்பட்டிருக்கும் அல்லவா? ஜெயலலிதா படத் திற்கான வரலாற்றுக் குறிப்பில், அவர் மீது இப்படியொரு வழக்கு நடைபெற்றது, அவரது மறைவுக்குப் பிறகு இப்படியொரு தீர்ப்பு அளிக்கப்பட்டது என்பதும் சேர்க்கப்படுமா? வருங்காலத் தலைமுறைகள் அதைத் தெரிந்துகொள்ள வசதி செய்யப்படுமா?சட்டமன்றத்தைக் கூட்டி, அதில் ஒரு தீர்மானமாக முன்வைத்து, அதன் மீது வாதங்கள் நடைபெற்று, தீர்மானம் நிறைவேற்றப்பட்டு இந்தப் படம் திறக்கப்பட்டிருந்தால் கூட சட்டமன்ற ஜனநாயகத்திற்கு மதிப்பளித்திருக்கிறார்கள் என்றாவது எடுத்துக்கொள்ளலாம். அதற்கும் இவர்கள் தயாராக இல்லை.இவர்களுக்கு உண்மையிலேயே ஜெயலலிதா நினைவைப் போற்ற வேண்டும், அவரது புகழை மேலோங்கச் செய்ய வேண்டும் என்ற அக்கறை இருக்குமானால், முதலில் ‘நீட்’ தேர்வு வேண்டாம் என்று அறிவிக்கட்டும். உதய் திட்டத்திலிருந்து வெளியேறட்டும். இவற்றை உறுதியாக எதிர்த்துவந்தவர் அவர். மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் இனி ஆளுநர் தானாகச் சென்று ஆய்வு நடத்தக் கூடாது என்று சொல்லட்டும். ஜெயலலிதா அதை ஒருபோதும் அனுமதித்திருக்க மாட்டார் என்று அஇஅதிமுக அடிமட்டத் தொண்டர்கள் குமுறலோடு சொல்கிறார்கள். ஜெயலலிதாவின் முக்கியமான ஒரு சாதனை, 69 சதவீத இட ஒதுக்கீடு. அந்த இட ஒதுக்கீட்டையே அர்த்தமற்றதாக்கும் வகையில் பொதுத்துறை நிறுவனங்கள் சீர்குலைக்கப்படுகின்றனவே, அதை எதிர்த்து நிற்கட்டும்.அதையெல்லாம் செய்யாமல், படத்திறப்பில் பங்கேற்கக் குடியரசுத் தலைவரும், பிரதமரும், மாநில ஆளுநரும் தயங்கினார்கள் என்று பேசப்படுகிற பின்னணியில் இந்த அவசரம் ஏன்? எந்நேரமும் ஆட்சி பறிபோகலாம், மறுபடியும் இதே செல்வாக்கோடு வர முடியாது என்ற அச்சம்தான் காரணம் என்று பொதுமக்கள் வெகு இயல்பாகச் சொல்கிறார்கள். அதற்கு முன் படத்தைத் திறப்பதன் மூலம், மக்களிடையே ஜெயலலிதாவுக்கு உள்ள ஆதரவுத் தளத்தைத் தக்கவைத்துக்கொள் கிற, அதைத் தங்களுக்கான வாக்குவங்கியாக மாற்ற முடியுமா என்ற அரசியல் கணக்குதான் இதிலே இருக்கிறது. அது மலிவான கணக்கு மட்டுமல்ல, தப்புக் கணக்கும் கூட.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

may 1

சோசலிசம் நீடூழி வாழ்க! இந்தியத் தொழிற்சங்க மையம் (சிஐடியு) மே தின அறிக்கை சர்வதேச தொழிலாளர் வர்க்கத்தின் சர்வதேச ஒருமைப்பாட்டு தினமா...