புதன், 27 டிசம்பர், 2017

மெட்ரோ ரயிலுக்கு 10% மக்கள் கூட ஆர்வம் காட்டவில்லை: 2ம் நிலை தொடங்குவதில் சிக்கல்


2017-12-28@ 01:08:21

சென்னை: மெட்ரோ ரயில் சேவைக்கு சென்னையில் இதுவரை 10% மக்கள் கூட ஆர்வம் காட்டாததால், பெரும் நஷ்டம் அடைந்துள்ளது. இதனால் 2ம் நிலை தொடங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைக்க திமுக ஆட்சி காலத்தில் மெட்ரோ ரயில் சேவை திட்டத்தின் முதற்கட்ட பணிகள் தொடங்கப்பட்டது. இதற்கு அப்போது துணை முதல்வராக இருந்த மு.க.ஸ்டாலின் ஜப்பானுக்கு சென்று, அதற்கான தொழில்நுட்ப உதவி மற்றும் கடன் உதவிகளை கோரி, அந்நாட்டுடன் ஒப்பந்தம் செய்துவிட்டு வந்தார். அதன்பின்னர், ஆட்சி மாற்றம் ஏற்பட்டதால் மெட்ரோ ரயில் பணிகள் கிடப்பில் போடப்பட்டு, மோனோ ரயில் திட்டம் தொடங்கும் பணியில் ஜெயலலிதா ஆர்வம் காட்டினார். இந்த திட்டம் பல்வேறு நாடுகளில் தோல்வி அடைந்ததால், தமிழ்நாட்டில் இந்த திட்டத்தை செயல்படுத்த பல்வேறு கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.பின்னர், நீண்ட போராட்டத்திற்கு பின் மோனோ ரயில் திட்டத்தை ஜெயலலிதா கைவிட்டார். தொடர்ந்து மெட்ரோ ரயில் பணிகள் தொடங்கப்பட்டு, பணிகள் முடிந்து பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது. ஆனால், சென்னையில் இயக்கப்படும் மெட்ரோ ரயில் சேவை கட்டணம் மற்ற மாநிலங்களை விட 3 மடங்கு, 4 மடங்கு அதிகமாகும்.

இதனால், மெட்ரோ ரயிலில்  பயணிக்க மக்கள் போதிய ஆர்வம் காட்டவில்லை. ரயில் கட்டணத்தை மாற்றி அமைக்க கோரி, பயணிகள் பலமுறை கோரியும் மெட்ரோ ரயில் அதிகாரிகளும், தமிழக அரசும் செவிசாய்க்கவில்லை.சென்னையில், முதல்நிலை மெட்ரோ ரயில் சேவை இயக்கப்பட்டு வரும் நிலையில், 85 ஆயிரம் கோடி மதிப்பிலான 107.55 கி.மீ தூரம் கொண்ட இரண்டாம் நிலை மெட்ரோ சேவை தொடங்குவதற்காக தமிழக அரசு சார்பில் முழு அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில், முதல் நிலை மெட்ரோ ரயில் சேவை சரியாக இயங்காததற்கான காரணம் ஏதும் தெரிவிக்கப்படவில்லை. இதுகுறித்து மத்திய அரசு உரிய விளக்கம் கேட்டும், தமிழக அரசு சரியான பதிலை அளிக்கவில்லை. சென்னையில் இயங்கி வரும் மெட்ரோ ரயில் சேவை பெரும்பாலும் மக்களை இதுவரை கவரவில்லை.முதல்நிலை மெட்ரோ ரயில் சேவை 45 கி.மீ, 20 ஆயிரம் கோடியில் தொடங்கப்பட்டது.

இதில் 28 கி.மீ, 20 ரயில் நிலையங்களில் ரயில் சேவை நடந்து வருகிறது. இதில், தினமும் 4.5 லட்சம் பேர் பயணம் செய்ய வேண்டும். ஆனால், 30 ஆயிரம் பேர் மட்டுமே பயணம் செய்து வருகின்றனர். இது 10 சதவீதத்திற்கும் குறைவானது. பயணிகளிடம் போதிய வரவேற்பு இல்லாததால், இரண்டாம் நிலை மெட்ரோ ரயில் சேவை தொடங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. முதல்நிலையில் 45 கி.மீ முழுமையடைந்தாலும் பயணிகளின் எண்ணிக்கை 50 சதவீதத்தை எட்டுவதும் சந்தேகமாக உள்ளது. இதற்கு மெட்ரோ அதிகாரிகள் சிலர் கூறுகையில், ‘முதல்நிலை மெட்ரோ ரயில் 45 கி.மீ தூரமும் இயக்கப்பட்ட பின்னர், பெரும்பாலும் மக்கள் பயன்படுத்த தொடங்குவார்கள். எழும்பூர் போன்ற பகுதியில் சேவை தொடங்கப்பட்ட பின்னர், மக்கள் அதிகம் பயன்படுத்துவார்கள். இருந்தாலும் 100 சதவீதம் பயணிகள் வருவார்கள் என்று சொல்லிவிட முடியாது. சில நாட்கள் எடுத்துக்கொள்ளும்’ என்றார்.

அதிகாரிகள் எதிர்மறை விளக்கம்
மெட்ரோ ரயிலை பயணிகள் அதிகம் பயன்படுத்தாதது ஏன்? என்ற கேள்விக்கு, மெட்ரோ ரயில் அதிகாரிகள் சிலர் எதிர்மறையான விளக்கமும் அளித்துள்ளனர்.
அவர்கள் கூறுகையில், ‘‘அதிகப்படியான டிக்கெட் விலை, டிக்கெட் விலைக்கு அதிகமான வாகன நிறுத்தம் கட்டணம், ரயில் நிலையங்களுக்கும் வீட்டுக்கும் இடையேயான தொலைவு என பல்வேறு பிரச்னைகள் மெட்ரோ ரயில் திட்டத்தில் உள்ளது. மேலும் இந்த மெட்ரோ ரயில் எந்தவிதத்திலும் மக்களை கவரும் வகையில் இல்லை. சென்னையில் வாழும் மக்கள் பலர் இன்னும் மெட்ரோ ரயிலை ஒரு முறைகூட பயன்படுத்தாமல் இருக்கின்றனர். முக்கிய காரணம் கட்டணம், இதனால் இரண்டாம் நிலை மெட்ரோ ரயில் சேவை தொடங்குவது கேள்விக்குறியாகவே உள்ளது’’ என்றனர்.

anbu

மின் வாரிய ஊழியர்களுக்கு பதவி உயர்வு வழங்க ஆணை வெளியீடு


2017-12-28@ 01:35:35

சென்னை: தமிழக மின்வாரியத்தில் அதிகாரிகள் முதல் களப்பணியாளர்கள் வரை சுமார் 80,000 பேர் பணிபுரிகின்றனர். ஹெல்பர், போர் மேன் உள்ளிட்ட களப்பணியாளர்களுக்கு 5 வருட அனுபவத்தின்படி பதவி உயர்வு அளிக்கப்படும். இதில் முறைகேடு நடப்பதாக தொழிற்சங்கம் ஒன்று வழக்கு தொடர்ந்தது. அந்த வழக்கில் சில மாதங்களுக்கு முன் தீர்ப்பு வெளிவந்தது. அதில், உடனே பதவி உயர்வு வழங்கும்படி உத்தரவிட்டிருந்தனர். இருப்பினும், வாரியம் காலம் தாழ்த்தியது. இதனால் சுமார் 18000 தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டனர். இதையடுத்து, கடந்த மாதம் நீதிமன்ற உத்தரவை மின்வாரியம் பெற்றுக் கொண்டது. பின்னர் பதவி உயர்வு வழங்குமாறு அனைத்து மண்டல தலைமை பொறியாளர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பினர்.

ஆனால் திடீரென மீண்டும் பதவி உயர்வு நிறுத்தி வைக்கப்பட்டது. இதனால் தொழிலாளர்கள் கடும் அதிருப்தியில் இருந்தனர். இந்நிலையில், பதவி உயர்வு உடனே வழங்கும்படி நேற்று மீண்டும் மின்வாரியம் உத்தரவு பிறப்பித்தது. இதுதொடர்பாக தலைமை பொறியாளர் ரவி வெளியிட்ட உத்தரவில், ‘தகுதி உள்ள அனைத்து தொழிலாளர்களுக்கும் அனுபவம் அடிப்படையில் பதவி உயர்வு வழங்கும்படி’ கூறியுள்ளார். இந்த உத்தரவு மண்டல கண்காணிப்பு பொறியாளர்கள் மற்றும் பல்வேறு பிரிவுகளின் தலைமை பொறியாளர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதற்காக வாரியத்துக்கு தொமுச, மின்வாரிய பொறியாளர் ஐக்கிய சங்கம் உள்ளிட்ட சங்கங்கள் நன்றி தெரிவித்துள்ளன.

செவ்வாய், 26 டிசம்பர், 2017

SAFE




தேசிய ஊரக நலவாழ்வு இயக்கத்தின் மூலம் கர்ப்பிணிப் பெண்களுக்கு தமிழக அரசின் உதவித்தொகை வழங்கப்படுகிறது. இதில் அரசு ஆரம்ப சுகாதார நிலைய ஊழியர்கள் அதிகாரிகள் துணையுடன் முறைகேட்டில் ஈடுபடுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
தமிழக அரசின் கர்ப்பிணிப் பெண்களுக்காகவும், குழந்தை நலனுக்காகவும் என தேசிய நல்வாழ்வு திட்டம் மூலம் முன்பு ரூ.12 ஆயிரம் என்றும், பின் ரூ.18 ஆயிரம் எனவும் உதவித்தொகை உயர்த்தி வழங்கப்படுகிறது. இது முதல் இரு குழந்தைகளுக்கு வழங்கப்படும். இதற்காக கர்ப்பக்காலம் முதல் பிரசவ காலம் வரையில் அரசு மருத்துவமனை மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் தொடர் மருத்துவ பரிசோதனைகள் செய்யப்பட்டு அட்டை தரப்படுகிறது. பெரும்பாலும் இப்பணியை கிராம சுகாதார செவிலியர்களே செய்கின்றனர்.
இதற்கான உதவித்தொகை ஒரே தவணையில் இல்லாமல் பல தவணைகளாகப் பயனாளிகளின் வங்கிக் கணக்கில் அரசால் போடப்படுகிறது. இந்த தவணைமுறையில்தான் இடையில் பண முறைகேடு நடைபெறுவதாக பயனாளிகள் குற்றம் சுமத்துகின்றனர்.
விழுப்புரம் மாவட்டம் எலவனாசூர்கோட்டையில் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது. உளுந்தூர்பேட்டை நகரில் பெரும்பகுதி மற்றும் ஏராளமான கிராமங்களில் உள்ள கர்ப்பிணிப்பெண்களுக்கு இங்குதான் பேறுகாலத்திற்கு முன்பும், பின்பும் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது. உளுந்தூர்பேட்டை நகரில் உ.கீரனூர் பகுதியில் 10க்கும் மேற்பட்டோருக்கு வழங்க வேண்டிய உதவித் தொகையில் முறைகேடு நடந்துள்ளதாக கூறுகிறார் சிபிஎம் உளுந்தூர்பேட்டை நகரக்குழு உறுப்பினரான பி.ஸ்டாலின்.
பொய்க் கணக்கு
“என் 2 குழந்தைகளுமே அரசு மருத்துவமனையில் பிறந்தவைதான். ஆனால் 2 ஆவது குழந்தை தனியார் மருத்துவமனையில் பிறந்ததாகக்கூறி எனக்கு உதவித்தொகை வழங்க மறுத்துவிட்டனர். ஆனால் இவர்கள் கூறுவது பொய். முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பிரசவம் நடைபெற்று அவர்கள் தந்த குழந்தைக்கான பிறந்த சான்று உள்ளது” என்று மருத்துவமனை பிறப்புச்சான்றை காட்டினார் பயனாளி எம்.ரேவதி. இதில் வினோதம் என்னவென்றால் ரூ. 4000 மட்டும் இக்குழந்தைக்காக இவரின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது. மீதித் தொகை கேட்டு அணுகியபோதுதான் இந்த தனியார் மருத்துவமனை என்ற பதில்.
இதேபோல் பிறந்த 2 குழந்தைகளுக்குமே உதவித்தொகை கிடைக்காத சத்யா, முதல் குழந்தைக்கு ரூ 12,000 கிடைத்து தற்போது 2 வயது ஆன இரண்டாம் குழந்தைக்கு இதுவரை பணம் கிடைக்கவில்லை எனக் கூறும் பரந்தாமன் என்பவரின் மனைவி ஷீலா, பிப்ரவரி 2015 ல் பிறந்த முதல் குழந்தைக்கு ரூ.8000, ஜூன் 2017 ல் பிறந்த 2ஆவது குழந்தைக்கு ரூ 4000 என குறைவான உதவித்தொகை மட்டும் வங்கிக் கணக்கில் வரவு வந்துள்ள ஓம்பிரகாஷ் என்பவரின் மனைவி ஜெயமேரி… என ஏமாற்றப்பட்டோரின் பட்டியல் நீள்கிறது. இந்த எலவனாசூர்கோட்டை மருத்துவமனையின் எல்லைக்குள் உள்ள பல கிராமங்களிலும் உள்ள ஏராளமான தாய்மார்களின் வேதனைக்குரலாகவும் இது உள்ளது.
நாம் மருத்துவமனை வட்டாரத்தில் விசாரித்தபோது அரசு பணம் ஒதுக்குவதில் தாமதம் ஏற்படுவதாக சொல்லப்படுகிறது. ஆனால் ஒரு பயனாளிக்கு பணம் கொடுக்கப்பட்டதாக கணக்கில் உள்ளது. இந்தப் பணம் பல மாதங்களாக பயனாளி வங்கிக் கணக்கில் செலுத்தப்படவில்லை. உண்மையிலேயே இந்த உதவித் தொகையைப் பெற பல பயனாளிகள் இதில் 4 இல் ஒருபகுதி பணம் (கையூட்டு) செலவழித்துள்ளதாகவும் கூறுகின்றனர். விழுப்புரம் மாவட்டத்திலும், தமிழகம் முழுவதிலும் இதற்கென தனி விசாரணை நடத்தினால் பலகோடி ரூபாய் பயனாளிகளின் பணம் சூறையாடப்பட்டுள்ளது வெளிவரும். கூடவே நிர்வாகம் செய்வோரின் மறுபுறமும் கூட.
“நாணமில்லாதவனுக்கு நாலுபக்கம் வாசல்படி” என்பதைப்போல தமிழக அதிமுக அரசு எந்தக் கட்டுப்பாடுமில்லாமல் உள்ளது என சமூக ஆர்வலர்கள் குற்றம் சுமத்துகின்றனர். பல்வேறு துறைகளில் முறைகேடுகள் நடைபெற்றாலும் அதனைக் கண்டு கொள்ளாமல் மேலும் நடைபெற ஊக்கமூட்டுவதுபோல அமைதியாய் உள்ளது அரசு. பகட்டு விளம்பரங்களால் அனைத்தையும் மூடி மறைக்க முடியாது என்பதை அவ்வப்போது மக்கள் உணர வைத்துக் கொண்டுதான் உள்ளார்கள்.
  • வி.சாமிநாதன்.
சென்னை, டிச. 24
தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (என்.சி.இ.ஆர்.டி) பாடத் ட்டத்தைபின்பற்றாத தனியார் சி.பி.எஸ்.இ. பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தனியார் சி.பி.எஸ்.இ. பள்ளிகள், தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (என்.சி.இ.ஆர்.டி.) விநியோகிக்கும் புத்தகங்களை மட்டுமே பயன்படுத்த உத்தரவிடக் கோரி சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் புருஷோத்தமன், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த மனு நீதிபதி கிருபாகரன் முன்விசாரணைக்கு வந்த போது, மனுதாரர் புருஷோத்தமன், என்.சி.இ.ஆர்.டி. பரிந்துரைப்படி முதலாம் வகுப்பு மாணவர்களுக்கு தாய்மொழியுடன், ஆங்கிலம், கணிதம் மட்டுமே கற்றுக்கொடுக்க வேண்டும். ஆனால் தனியார் பள்ளிகள் ஆங்கிலம், கணிதம், தமிழ், அறிவியல், கணினி அறிவியல், இந்தி, நன்னடத்தைப் பாடங்களையும் கூடுதலாக திணிப்பதாக குற்றம் சாட்டினார். இதையடுத்து நீதிபதி கிருபாகரன், முதலாம் வகுப்பு படிக்கும் குழந்தையை அதிக புத்தகங்களை சுமக்க விடுவது அநியாயம். மழலைப் பருவத்தில் மாணவர்களுக்கு கல்வி சுமையாக இருக்கக் கூடாது எனத் தெரிவித்தார்.
என்.சி.இ.ஆர்.டி. பாடத்திட்டத்தை மட்டுமே கடைப்பிடிக்க வேண்டும் என்று உத்தரவிட்ட நீதிபதி, பின்பற்றாத பள்ளிகளின் அங்கீகாரத்தை தேவைப்பட்டால் ரத்து செய்ய வேண்டும் என சி.பி.எஸ்.இ.க்கு அறிவுறுத்தினார். அனைத்து சி.பி.எஸ்.இ.பள்ளிகளிலும் என்.சி.இ.ஆர்.டி. பாடத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகிறதா என்பதைக் கண்டறிந்து, தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள உத்தரவிட்ட நீதிபதி இது தொடர்பாக ஜனவரி 10ம் தேதிக்குள் பதிலளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.

HAM RADIO

ஊடகவியலாளர்கள், அரசு அதிகாரிகள், பொறியாளர்கள் என, மக்களோடு தொடர்பில் இருக்கும் ஒவ்வொருவரும், ஒரு ‘ஹாம் ரேடியோ’ உரிமம் வைத்திருக்க வேண்டும் என்கிறார், சென்னை பல்கலை இதழியல் துறை பேராசிரியர் தங்க.ஜெய்சக்திவேல்.
‘ஹெல்ப் ஆல் மேன்கைண்டு’ என்பதன் சுருக்கம் தான், ‘ஹாம்’. போலீசார் பயன்படுத்தும் ‘வாக்கி டாக்கி’ போன்றவையும் ‘ஹாம் ரேடியோ’க்கள் தான். இதில், ஒரு நேரத்தில், ஒருவர் பேச, உபயோகத்தில் உள்ள அனைவரும் கேட்க முடியும். இதன் ஒலிபரப்பு, தூர, எல்லைகளைக் கடந்தது. இதற்காக, பேசும் கருவி, ஆன்டனா உள்ளிட்ட கருவிகளை வாங்கிக் கொள்ள வேண்டும்.
உலகில் உள்ள அனைத்து ‘ஹாம் ரேடியோ’ உபயோகிப்பாளர்களையும் இணைத்து, தொடர்பு கொள்ளும் வசதி இருப்பதால், இக்கருவியை வாங்கவும், பயன்படுத்தவும் சில கட்டுப்பாடுகளை, அரசு விதித்திருக்கிறது. அதற்கான தேர்வெழுதி வெல்வோர், கருவியை வாங்கவும், அவர்களுக்கான, அடையாள எண், உரிமத்தை பெறவும் முடியும். தேர்வு குறித்த விளக்கங்களை, மூத்த அமெச்சூர் வானொலி பயனாளர்கள் இலவசமாக வழங்குகின்றனர்.
பயன்கள்:                                                                                                                                                                               வானொலியைப் போலவே, அனைத்து இடங்களுக்கும், இதை எளிதாக எடுத்து செல்ல முடியும். இதனை இயக்க, குறைந்த அளவு மின்சாரம் போதும். அதிக நாட்கள் பயனளிக்கும். எத்தனை மணி நேரம் பேசினாலும், கட்டணம் கிடையாது. ஒருமுறை கருவிகளை வாங்கும் செலவு மட்டும் தான்.
பூகம்பம், மண்சரிவு, புயல், வெள்ளம், தீ, சுனாமி போன்ற பேரிடர் காலங்களில், அனைவரையும் தொடர்பு கொள்ள சிறந்த சாதனம் இது தான். சர்வதேச அளவில், உடனடியான உதவிகளை பெறவும், அளிக்கவும் இது உதவும். கடந்த காலங்களில், குஜராத் பூகம்பம், சுனாமி உள்ளிட்ட பேரிடர் காலங்களில், அமெச்சூர் வானொலி உபயோகிப்பாளர்கள், தகவல் தொடர்பிலும், மீட்பு பணியிலும் பெரும்பங்காற்றினர் என்பது குறிப்பிடத்தக்கது.
உரிமம் பெறும் நடைமுறை: இந்திய தொலைத்தொடர்பு மற்றும் தகவல் ஒலிபரப்பு துறையின் கீழ் இயங்கும், ‘ஒயர்லெஸ் மானிட்டரிங் ஸ்டேஷன்’, ‘ஹாம் ரேடியோ’ பயன்பாட்டாளருக்கான உரிமம் வழங்கும் தேர்வை நடத்துகிறது. இந்த தேர்வை எழுத, ஒரே நேரத்தில் 30க்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்திருக்க வேண்டும்.
இணையத்தில், ஆங்கிலத்தில் நடக்கும் இந்த தேர்வை எழுத, ‘மோர்ஸ் கோடு’ எனப்படும், ஒலிபரப்பு அனுப்புதல் மற்றும் பெறுதல் முறைகள், தொடர்பு வழிமுறைகள், அடிப்படை மின்னணுவியல் துறை சார்ந்த அறிவு இருக்க வேண்டும். ஒரு நிமிடத்திற்கு, 8 மோர்ஸ் வார்த்தைகளை பதியும் திறமை உள்ளவர்கள், பொது உரிமம் பெற முடியும். இத்தேர்வு, கிரேடு 1 மற்றும் கிரேடு 2 ஆகிய நிலைகளில் உள்ளது. தனது நிலைக்கேற்ப, ஒலிபரப்பு துாரமும், தரமும் இருக்கும்.
தேர்வில் வெற்றி பெற்ற பின், ‘கால் சைன்ஸ்’ எனப்படும், உரிம எண் வழங்கப்படும். அந்த எண்ணைக் கொண்டே, உரிமம் பெற்றவரின் இருப்பிடம் உள்ளிட்ட அனைத்து விவரங்களையும், மற்றவர்கள் தெரிந்துகொள்ள முடியும். டபிள்யூ.பி.சி., எனப்படும், ‘தி ஒயர்லெஸ் பிளானிங் அண்டு கம்யூனிகேஷன்ஸ்’ என்ற இணையத்தின் வழியாக, ‘ஹாம் ரேடியோ’ பயன்பாட்டுக்கான தகவல்கள் விண்ணப்பங்கள், புத்தகங்களை பெறலாம்.
தற்காலத்தில், இணையத்தோடு ஹாமை இணைக்கும் மென்பொருட்களும் உள்ளன.
அலைபேசிகளோடு இணைக்கும் செயலிகளும் உள்ளன.தேர்வு குறித்த தகவல்களை பெற ‘எஸ்.ஆர்.எச்.கியூ., பேசிட் ஆசியா லிட்., அருகில், பெருங்குடி, கந்தன்சாவடி, சென்னை – 96’ என்ற முகவரியை, அணுகலாம். தொடர்பு எண்: 044-24960275; தொலைநகல்: 044-24963083, 044-2496 0234.

may 1

சோசலிசம் நீடூழி வாழ்க! இந்தியத் தொழிற்சங்க மையம் (சிஐடியு) மே தின அறிக்கை சர்வதேச தொழிலாளர் வர்க்கத்தின் சர்வதேச ஒருமைப்பாட்டு தினமா...