புதன், 27 டிசம்பர், 2017

மெட்ரோ ரயிலுக்கு 10% மக்கள் கூட ஆர்வம் காட்டவில்லை: 2ம் நிலை தொடங்குவதில் சிக்கல்


2017-12-28@ 01:08:21

சென்னை: மெட்ரோ ரயில் சேவைக்கு சென்னையில் இதுவரை 10% மக்கள் கூட ஆர்வம் காட்டாததால், பெரும் நஷ்டம் அடைந்துள்ளது. இதனால் 2ம் நிலை தொடங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைக்க திமுக ஆட்சி காலத்தில் மெட்ரோ ரயில் சேவை திட்டத்தின் முதற்கட்ட பணிகள் தொடங்கப்பட்டது. இதற்கு அப்போது துணை முதல்வராக இருந்த மு.க.ஸ்டாலின் ஜப்பானுக்கு சென்று, அதற்கான தொழில்நுட்ப உதவி மற்றும் கடன் உதவிகளை கோரி, அந்நாட்டுடன் ஒப்பந்தம் செய்துவிட்டு வந்தார். அதன்பின்னர், ஆட்சி மாற்றம் ஏற்பட்டதால் மெட்ரோ ரயில் பணிகள் கிடப்பில் போடப்பட்டு, மோனோ ரயில் திட்டம் தொடங்கும் பணியில் ஜெயலலிதா ஆர்வம் காட்டினார். இந்த திட்டம் பல்வேறு நாடுகளில் தோல்வி அடைந்ததால், தமிழ்நாட்டில் இந்த திட்டத்தை செயல்படுத்த பல்வேறு கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.பின்னர், நீண்ட போராட்டத்திற்கு பின் மோனோ ரயில் திட்டத்தை ஜெயலலிதா கைவிட்டார். தொடர்ந்து மெட்ரோ ரயில் பணிகள் தொடங்கப்பட்டு, பணிகள் முடிந்து பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது. ஆனால், சென்னையில் இயக்கப்படும் மெட்ரோ ரயில் சேவை கட்டணம் மற்ற மாநிலங்களை விட 3 மடங்கு, 4 மடங்கு அதிகமாகும்.

இதனால், மெட்ரோ ரயிலில்  பயணிக்க மக்கள் போதிய ஆர்வம் காட்டவில்லை. ரயில் கட்டணத்தை மாற்றி அமைக்க கோரி, பயணிகள் பலமுறை கோரியும் மெட்ரோ ரயில் அதிகாரிகளும், தமிழக அரசும் செவிசாய்க்கவில்லை.சென்னையில், முதல்நிலை மெட்ரோ ரயில் சேவை இயக்கப்பட்டு வரும் நிலையில், 85 ஆயிரம் கோடி மதிப்பிலான 107.55 கி.மீ தூரம் கொண்ட இரண்டாம் நிலை மெட்ரோ சேவை தொடங்குவதற்காக தமிழக அரசு சார்பில் முழு அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில், முதல் நிலை மெட்ரோ ரயில் சேவை சரியாக இயங்காததற்கான காரணம் ஏதும் தெரிவிக்கப்படவில்லை. இதுகுறித்து மத்திய அரசு உரிய விளக்கம் கேட்டும், தமிழக அரசு சரியான பதிலை அளிக்கவில்லை. சென்னையில் இயங்கி வரும் மெட்ரோ ரயில் சேவை பெரும்பாலும் மக்களை இதுவரை கவரவில்லை.முதல்நிலை மெட்ரோ ரயில் சேவை 45 கி.மீ, 20 ஆயிரம் கோடியில் தொடங்கப்பட்டது.

இதில் 28 கி.மீ, 20 ரயில் நிலையங்களில் ரயில் சேவை நடந்து வருகிறது. இதில், தினமும் 4.5 லட்சம் பேர் பயணம் செய்ய வேண்டும். ஆனால், 30 ஆயிரம் பேர் மட்டுமே பயணம் செய்து வருகின்றனர். இது 10 சதவீதத்திற்கும் குறைவானது. பயணிகளிடம் போதிய வரவேற்பு இல்லாததால், இரண்டாம் நிலை மெட்ரோ ரயில் சேவை தொடங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. முதல்நிலையில் 45 கி.மீ முழுமையடைந்தாலும் பயணிகளின் எண்ணிக்கை 50 சதவீதத்தை எட்டுவதும் சந்தேகமாக உள்ளது. இதற்கு மெட்ரோ அதிகாரிகள் சிலர் கூறுகையில், ‘முதல்நிலை மெட்ரோ ரயில் 45 கி.மீ தூரமும் இயக்கப்பட்ட பின்னர், பெரும்பாலும் மக்கள் பயன்படுத்த தொடங்குவார்கள். எழும்பூர் போன்ற பகுதியில் சேவை தொடங்கப்பட்ட பின்னர், மக்கள் அதிகம் பயன்படுத்துவார்கள். இருந்தாலும் 100 சதவீதம் பயணிகள் வருவார்கள் என்று சொல்லிவிட முடியாது. சில நாட்கள் எடுத்துக்கொள்ளும்’ என்றார்.

அதிகாரிகள் எதிர்மறை விளக்கம்
மெட்ரோ ரயிலை பயணிகள் அதிகம் பயன்படுத்தாதது ஏன்? என்ற கேள்விக்கு, மெட்ரோ ரயில் அதிகாரிகள் சிலர் எதிர்மறையான விளக்கமும் அளித்துள்ளனர்.
அவர்கள் கூறுகையில், ‘‘அதிகப்படியான டிக்கெட் விலை, டிக்கெட் விலைக்கு அதிகமான வாகன நிறுத்தம் கட்டணம், ரயில் நிலையங்களுக்கும் வீட்டுக்கும் இடையேயான தொலைவு என பல்வேறு பிரச்னைகள் மெட்ரோ ரயில் திட்டத்தில் உள்ளது. மேலும் இந்த மெட்ரோ ரயில் எந்தவிதத்திலும் மக்களை கவரும் வகையில் இல்லை. சென்னையில் வாழும் மக்கள் பலர் இன்னும் மெட்ரோ ரயிலை ஒரு முறைகூட பயன்படுத்தாமல் இருக்கின்றனர். முக்கிய காரணம் கட்டணம், இதனால் இரண்டாம் நிலை மெட்ரோ ரயில் சேவை தொடங்குவது கேள்விக்குறியாகவே உள்ளது’’ என்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

may 1

சோசலிசம் நீடூழி வாழ்க! இந்தியத் தொழிற்சங்க மையம் (சிஐடியு) மே தின அறிக்கை சர்வதேச தொழிலாளர் வர்க்கத்தின் சர்வதேச ஒருமைப்பாட்டு தினமா...