திங்கள், 19 பிப்ரவரி, 2018

இரக்கமற்ற தமிழக அரசு TNEB தொழிலாளர்களை வேலைநிறுத்தம் நோக்கித் தள்ளியது!

தமிழ்நாடு மின் வாரியத்தைச் சேர்ந்த ஆயிரக் கணக்கானத் தொழிலாளர்கள் 2018 பிப்ரவரி 16 முதல் வேலைநிறுத்தம் செய்யப் போவதாக அறிவித்திருக்கிறார்கள். 2.57 என்ற காரணியின் அடிப்படையில் சம்பள உயர்வு வேண்டும் என்ற கோரிக்கையை அரசு ஏற்காததாலும், சம்பள ஒப்பந்தத்தை இறுதி செய்வதில் அரசுக்கு விருப்பம் இல்லாத காரணத்தாலும், CITU வையும், பிற சிறிய சங்கங்களையும் சேர்ந்த தொழிலாளர்கள் அரசுக்குத் தங்கள் எதிர்ப்பைத் தெரிவித்துள்ளனர். பிப்ரவரி 8 அன்று சென்னையில் உள்ள மின்சார வாரியத் தலைமையகத்தின் முன்பு நடந்த ஆர்ப்பாட்டம் ஒன்றில் தலைவர்கள் பலரும் பேசினர். அரசு மற்றும் வாரிய அதிகாரிகளின் செயலின்மையை விளக்கினர். வேலைநிறுத்தப் போராட்டத்தை வெற்றிகரமானதாக்க உறுதியேற்றனர். தொழிலாளர் துறை அலுவலகத்தில் நடைபெற்ற சமரசப் பேச்சுவார்த்தை எந்த விளைவையும் அளிக்கவில்லை.

புதிய சம்பள ஒப்பந்தம் வேண்டும் என்று கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக மின் வாரியத் தொழிலாளர்கள் கோரிவருகின்றனர். இதற்கு முந்தைய ஒப்பந்தம் டிசம்பர் 2015ல் முடிவுக்கு வந்தது. அது முதற்கொண்டு ஒப்பந்தம் ஒன்றைச் செய்துகொள்ள வேண்டும் என்று மின்சார வாரியத்தையும் தமிழக அரசையும் தொழிற்சங்கங்கள் நெருக்கிக்கொண்டு வருகின்றன. சம்பள அதிகரிப்பின் அளவு என்ன என்பது, போக்குவரத்துத் துறை போலவே, இங்கும் பிரச்சனையாக இருக்கிறது. 2.57 என்ற காரணியின் அடிப்படையில் ஊதிய உயர்வு அமைய வேண்டும் என்பதில் தொழிற்சங்கங்கள் உறுதியாக நிற்கின்றன. கடந்த ஆண்டு நடைபெற்ற பேச்சுவார்த்தையின் இதனைக் கோட்பாடு அடிப்படையில் அரசு ஒப்புக்கொண்டிருந்தது. இப்போது, அரசு சொன்ன சொல்லிலிருந்து பின்வாங்குவதாகத் தோன்றுகிறது. சில தொழிற்சங்கங்கள் தங்கள் நிலையில் உறுதியாக இருந்தன. மற்றவர்கள் தற்காலிக நிவாரணம் ஒன்றை ஏற்றுக்கொண்டுள்ளனர்.

Video Player
0:00
00:18
தமிழ்நாடு மின்சார வாரியம் அரசுக்குச் சொந்தமான கம்பெனியாகும். மின்சார உற்பத்திக்கும், அதனை மாநிலம் முழுமைக்கும் வினியோகம் செய்வதற்கும் அது பொறுப்பானதாகும். இவற்றைச் செய்வதற்காக இரண்டு துணை கம்பெனிகள் உருவாக்கப்பட்டுள்ளன. தமிழ்நாடு மின்னுற்பத்தி மற்றும் வினியோக நிறுவனம் ( TANGEDCO), மற்றும் Tamil Nadu Transmission Company என்று அவை அழைக்கப்படுகின்றன. பொறியாளர்கள், கண்காணிப்பாளர்கள், உதவியாளர்கள் என்று 80 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் இந்த இரண்டு கம்பெனிகளில் பணிபுரிகின்றனர். தொழிலாளர்கள் பெறும் சம்பளம் 5 ஆயிரம் முதல் 10 ஆயிரம் வரை வருவதாகவும் மிக அதிகபட்சமான சம்பளம் 35 ஆயிரம் என்றும் TANGEDCOவின் 2014 ஆவணம் சொல்கிறது. மேலும், ஆயிரக் கணக்கான ஒப்பந்தத் தொழிலாளர்களும் பணியாற்றுகின்றனர். அவர்கள் மிகக் குறைவான கூலிக்கு பல ஆண்டுகள் தொடர்ச்சியாக உழைத்து வருகின்றனர்.
பிப்ரவரி 8 அன்று சென்னையின் அண்ணா சாலையில் உள்ள TNEB தலைமை அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் ஒன்று நடைபெற்றது. ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் அதில் கலந்துகொண்டனர். இதே போன்ற கூட்டங்கள் பல்வேறு மாவட்டங்களிலும் நடைபெற்றன. கூடுதல் பணிச் சுமை மிக முக்கியமானப் பிரச்சனையாக இருப்பது பற்றியும் மற்ற பிற பிரச்சனைகள் பற்றியும் தலைவர்கள் பேசினர். வேலையின் தன்மை காரணமாக, உயிருக்கு ஆபத்தான நிலையில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கான கூலிப் பேச்சுவார்த்தையை முடிவுக்குக் கொண்டு வராத அரசை அவர்கள் கடுமையாகச் சாடினர். அதுமட்டுமல்லாமல் அனைத்து மட்டங்களில் உள்ள 40 ஆயிரம் பணியிடங்களை நிரப்புவதாகச் சொன்ன அரசு அதனைச் செய்யத் தவறியதையும் சுட்டிக் காட்டி விமர்சித்தனர். DMDK, பாட்டாளி மக்கள் கட்சி மற்றும் சிலம் அதிமுகவின் ஊழல் மற்றும் இரக்கமற்றத் தன்மை பற்றி பேசுவதற்கு இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டனர்.
31.03. 13 நிலவரப்படி ஊழியர்களின் எண்ணிக்கை

 ஊழியர்வகையினம்
 அனுமதிக்கப்பட்டஊழியர்எண்ணிக்கை
 காலியிடம்
 நடப்பில்இருக்கும்ஊழியர்எண்ணிக்கை
 பிரிவு 1
தொழில்நுட்பம்
 931
 48
883 
 நிர்வாகம்
 49
 6
 43
கணக்கு/தணிக்கை
105
10
95
பிரிவு 2
தொழில்நுட்பம்
8889
391
8498
நிர்வாகம்
477
39
438
கணக்கு/தணிக்கை
746
24
722
பிரிவு 3
ப்ராவின்சியல்(ரீடிங் எடுப்பதுஉள்ளிட்டஎழுத்துப் பணி)
28472
10832
17640
RWE (லைன்மேன்உள்ளிட்டபணியாளர்கள்)
51980
25434
26546
பிரிவு 4
ப்ராவின்சியல்(ரீடிங் எடுப்பதுஉள்ளிட்டஎழுத்துப் பணி)
1601
561
1040
RWE (லைன்மேன்உள்ளிட்டபணியாளர்கள்)
44280
12095
32185
மொத்தம்
137530
49440
88090

தலைவர்கள் பேசியதில் பெரும்பகுதி கூலிப் பிரச்சனை தொடர்பானதாகவே இருந்தது. ஆனால், கூட்டத்தில் கலந்துகொண்டவர்களில் சிலரிடம் தொழிலாளர் கூடம் பேசியபோது அவர்கள் ஒப்பந்தத் தொழிலாளர்கள் பிரச்சனை பற்றி நிறைய பேசினார்கள். இரண்டு இளம் தொழிலாளர்களைச் சந்தித்தோம். அவர்கள் இருவரும் வட சென்னை அனல் மின்நிலையத்தின் பராமரிப்புத் துறையில் பணியாற்றுகிறார்கள். கடந்த 7 ஆண்டுகளாக ஒப்பந்தத் தொழிலாளர்களாக வேலை செய்கிறார்கள். அவர்கள் வாங்கும் சம்பளம் மாதம் ஒன்றுக்கு 7 500 முதல் 10000 ரூபாய் வரை வருகிறது. இது நிரந்தரத் தொழிலாளர்கள் வாங்கும் சம்பளத்தின் சிறு பகுதிதான். அவர்களுக்குச் சம்பளத்துடன் கூடிய விடுப்பு கிடையாது. ஒரு நாள் விடுமுறை எடுத்தால் கூட அதற்கான சம்பளம் போய்விடும். “மாநிலத்தில் உற்பத்தியாகும் மின்சாரத்தில் 2000 மெகாவாட் நாங்கள் (ஒப்பந்தத் தொழிலாளர்கள்) உற்பத்தி செய்வதுதான். ஆனால், எங்களுக்கு எந்த அடையாளமும் இல்லை. எந்தப் பாதுகாப்பும் இல்லை“, ஒரு தொழிலாளர் சொன்னார். நிரந்தரத் தொழிலாளர்களுக்கு மட்டும்தான் சீருடையும் பாதுகாப்புச் சாதனங்களும் தரப்படுகின்றன. இதனால், வேலை செய்யும் இடம் மிக ஆபத்தான இடமாக மாறிவிட்டிருக்கிறது. ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கு அளிக்கப்படும் அடையாள அட்டைகளில் வேலை செய்யும் இடத்தின் பெயர் இருக்காது. ஒப்பந்தக்காரர் பெயர் மட்டுமே இருக்கும். ஒருநாள் நிரந்தரமாவோம் என்ற நம்பிக்கையில், குறைவான கூலிக்கு ஒப்பந்தத் தொழிலாளர்கள் தொடர்ந்து வேலை செய்து வருகிறார்கள்.
நாங்கள் பேசிய தொழிலாளடரகளில் பலர், நிரந்தரத் தொழிலாளர்கள் ஆவதற்கு முன்பு பல ஆண்டுகளாக, ஒப்பந்தத் தொழிலாளர்களாக வேலை செய்தவர்கள்தான். பின்னர், அவர்களுக்கு நேரடி வேலை வழங்கப்பட்டுள்ளது. ஒரு தொழிலாளர் 15 ஆண்டுகளுக்கு மீட்டர் ரீடிங் எடுப்பவராக ஒப்பந்தப் பணியில் இருந்திருக்கிறார். பின்னர், எட்டு ஆண்டுகளுக்கு முன்புதான் நிரந்தரம் செய்யப்பட்டிருக்கிறார். தற்போது அவர், மாதம் ரூபாய் 20 ஆயிரம் சம்பளம் வாங்குகிறார். சம்பள உயர்வு நடந்தால் மேலும் ஒரு 5 ஆயிரம் ரூபாய் கூடுதல் கிடைக்கும் என்று அவர் கணக்குப் போட்டு வைத்திருக்கிறார். காஞ்சிபுரம் பகுதியைச் சேர்ந்த மற்றொரு தொழிலாளர் ஒருவருக்கும் இதே மாதிரியான வேலை வரலாறுதான் நடந்திருக்கிறது.
வேலைநிறுத்தம் வெற்றிகரமானதாக இருக்கும் என்று தொழிற்சங்கங்கள் நம்புகின்றன. இருந்தபோதும், வேறுபட்ட நலன் உள்ள பல்வேறு யூனியன்கள் இருப்பது மிகப் பெரும் பலவீனமாக இருக்கிறது. வேலைநிறுத்தத்தில் பங்கெடுக்கும் CITUவில் இரண்டு அமைப்புகள் மூலம் பொறியாளர்களும் தொழிலாளர்களும் உறுப்பினர்களாக இருக்கிறார்கள். இந்த யூனியனில் ஒப்பந்தத் தொழிலாளர்கள் பலர் இருக்கின்றனர். வலதுசாரி சங்கமான பாரதீய மஸ்தூர் சங்கத்தில் கணிசமான உறுப்பினர்கள் இருக்கிறார்கள். அந்த சங்கமும் வேலைநிறுத்தத்தை ஆதரிக்கிறது. வேலைநிறுத்தத்தை PMK, DMDK, விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகளின் யூனியன்களும் அவற்றுடன் NLO, TNPEO, MAPPS, APPS சங்கங்களும் ஆதரிக்கின்றன. அஇஅதிமுகவின் அண்ணா தொழிற்சங்கப் பேரவையும், திமுகவின் தொழிலாளர் முன்னேற்றச் சங்கமும் இந்தப் பட்டியலில் இல்லை என்பது கவனிக்கத் தக்கது.
தொழிலாளர் கூடத்திடம் CITUவின் S.S சுப்பிரமணியம் பேசினார். பேச்சுவார்த்தை என்ற பெயரில் ‘துரோகச் சங்கங்களும்‘ அரசும் சேர்ந்து நாடகம் நடத்துவதாக அவர் குறிப்பிட்டார். கடந்த ஆண்டின் இரண்டாவது பாதியின்போது நடந்த பல்வேறு பேச்சுவார்த்தைகளில் சம்பள உயர்வு குறித்தும் உற்பத்தி பற்றியும் பல்வேறு கருத்துகளைத் தொழிற்சங்கங்கள் அளித்திருப்பதாக அவர் சொன்னார். ஆனால், ஒப்பந்தம் ஒன்றைச் செய்துகொள்ள வேண்டும் என்ற அரசுக்கு இல்லை. இதன் காரணமாக ஜனவரி 23 அன்று யூனியன்கள் வேலைநிறுத்தம் செய்யப் போவதாக அறிவித்தன. வேலைநிறுத்தம் துவங்குவதற்கு ஒரு நாள் முன்பு சமரசப் பேச்சுவார்த்தை நடந்தது. அந்தப் பேச்சுவார்த்தையில் பிப்ரவரி 12 அன்று ஒப்பந்தம் ஒன்று எட்டப்படும் என்று ஒப்புக்கொள்ளப்பட்டது.
மறுநாளே அரசாங்கம் பேச்சுவார்த்தைக்கு அழைத்தது. ஆனால், யூனியன்களின் கோரிக்கைக்கு அவர்கள் இணங்குவார்கள் என்பதற்கான அறிகுறி எதனையும் காணவில்லை 2.57 என்ற அளவுக்கு ஊதிய உயர்வு சாத்தியமில்லை என்றும், 2.40 என்ற அளவில் ஊதிய உயர்வை யூனியன்கள் ஒப்புக்கொள்ள வேண்டும், மேலும், ‘அலுவலர் அல்லது ஊழியர்‘ என்ற வேறுபாடு இன்றி ஊதிய உயர்வு 10 ஆண்டுகளுக்கு நடப்பில் இருக்கும் என்றும் அரசின் நிதித்துறைச் செயலாளர் மின்சாரத்துறை அமைச்சருக்கு 24 ஜனவரி அன்று கடிதம் ஒன்றை அனுப்பியிருக்கிறார். பழைய பாக்கிகள் பற்றிய கேள்விகளுக்கும் எந்தப் பதிலும் இல்லை.
இதற்கிடையில், மற்ற யூனியன்கள் முன்வந்து தற்காலிக நிவாரணமாக ரூபாய் 1250ஐ ஏற்றுக்கொண்டன. 2017 அக்டோபர் முதல் பலன் பெறும் வகையில் அந்தத் தொகை தொழிலாளர்களின் வங்கிக் கணக்குகளில் சேர்க்கப்பட்டது. அது தொழிலாளர்களுக்கு வரவேண்டியத் தொகையின் ஒரு பகுதிதான் என்பதால், அதனைத் திருப்பி அளிக்கவில்லை என்றும், இருந்தபோதும் கோரிக்கைகள் இன்னமும் தீர்க்கப்படாதிருக்கின்றன என்றும் தோழர் S.S குறிப்பிட்டார். தொழிலாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தத் தயாராக இருப்பது போன்ற தோற்றத்தை உருவாக்க அரசு முயற்சிப்பதாக அவர் சொன்னார். “நேற்று மின்சாரத் துறை அமைச்சரும், வாரிய அலுவலர்களும் எங்களைச் சந்திக்க அழைத்தனர். எங்களுக்கு நீங்கள் ஒரு பதிலை அளித்தாக வேண்டும் என்று அவர்களை மூன்று மணி நேரத்துக்கு நாங்கள் பிடித்து வைத்துக்கொண்டோம்“, என்றும் SS சொன்னார். பிப்ரவரி 12 அன்று தொழிலாளர் துறையில் நடைபெற்ற சமரசப் பேச்சுவார்த்தையின் போது எந்தப் பதிலையும் தராது நிர்வாகத் தரப்பினர் எழுந்து சென்று விட்டனர். நர்சுகள், போக்குவரத்துத் தொழிலாளர்கள் போராட்டத்தின்போது நிகழ்ந்தது போல நீதிமன்றத்தின் தலையீடு இருந்தால் என்ன செய்வீர்கள் என்று தோழர் SS அவர்களிடம் கேட்டபோது, “அது நடக்கும்போது அதனை நாங்கள் எதிர்கொள்வோம். அப்படி நடக்கும் என்றால், எங்களின் நியாயமான கோரிக்கைகளைப் பரிசீலிக்க வேண்டும் என்று நீதிபதிகள் ஏன் சொல்லக் கூடாது?“ என்று பதில் அளித்தார். வேலைநிறுத்தத்திற்கான தயாரிப்பு முழு வீச்சில் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. பிப்ரவரி 15 அன்று மற்றொரு சமரசப் பேச்சுவார்த்தை இருக்கிறது என்று யூனியன் தலைவர்கள் சொல்கிறார்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

may 1

சோசலிசம் நீடூழி வாழ்க! இந்தியத் தொழிற்சங்க மையம் (சிஐடியு) மே தின அறிக்கை சர்வதேச தொழிலாளர் வர்க்கத்தின் சர்வதேச ஒருமைப்பாட்டு தினமா...