நாணமில்லாதவனுக்கு நாலுபக்கம் வாசல்…” அவலத்தில் சுகாதாரத்துறை
on 0 COMMENTS
தேசிய ஊரக நலவாழ்வு இயக்கத்தின் மூலம் கர்ப்பிணிப் பெண்களுக்கு தமிழக அரசின் உதவித்தொகை வழங்கப்படுகிறது. இதில் அரசு ஆரம்ப சுகாதார நிலைய ஊழியர்கள் அதிகாரிகள் துணையுடன் முறைகேட்டில் ஈடுபடுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
தமிழக அரசின் கர்ப்பிணிப் பெண்களுக்காகவும், குழந்தை நலனுக்காகவும் என தேசிய நல்வாழ்வு திட்டம் மூலம் முன்பு ரூ.12 ஆயிரம் என்றும், பின் ரூ.18 ஆயிரம் எனவும் உதவித்தொகை உயர்த்தி வழங்கப்படுகிறது. இது முதல் இரு குழந்தைகளுக்கு வழங்கப்படும். இதற்காக கர்ப்பக்காலம் முதல் பிரசவ காலம் வரையில் அரசு மருத்துவமனை மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களி
ல் தொடர் மருத்துவ பரிசோதனைகள் செய்யப்பட்டு அட்டை தரப்படுகிறது. பெரும்பாலும் இப்பணியை கிராம சுகாதார செவிலியர்களே செய்கின்றனர்.
ல் தொடர் மருத்துவ பரிசோதனைகள் செய்யப்பட்டு அட்டை தரப்படுகிறது. பெரும்பாலும் இப்பணியை கிராம சுகாதார செவிலியர்களே செய்கின்றனர்.
இதற்கான உதவித்தொகை ஒரே தவணையில் இல்லாமல் பல தவணைகளாகப் பயனாளிகளின் வங்கிக் கணக்கில் அரசால் போடப்படுகிறது. இந்த தவணைமுறையில்தான் இடையில் பண முறைகேடு நடைபெறுவதாக பயனாளிகள் குற்றம் சுமத்துகின்றனர்.
விழுப்புரம் மாவட்டம் எலவனாசூர்கோட்டையில் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது. உளுந்தூர்பேட்டை நகரில் பெரும்பகுதி மற்றும் ஏராளமான கிராமங்களில் உள்ள கர்ப்பிணிப்பெண்களுக்கு இங்குதான் பேறுகாலத்திற்கு முன்பும், பின்பும் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது. உளுந்தூர்பேட்டை நகரில் உ.கீரனூர் பகுதியில் 10க்கும் மேற்பட்டோருக்கு வழங்க வேண்டிய உதவித் தொகையில் முறைகேடு நடந்துள்ளதாக கூறுகிறார் சிபிஎம் உளுந்தூர்பேட்டை நகரக்குழு உறுப்பினரான பி.ஸ்டாலின்.
பொய்க் கணக்கு
“என் 2 குழந்தைகளுமே அரசு மருத்துவமனையில் பிறந்தவைதான். ஆனால் 2 ஆவது குழந்தை தனியார் மருத்துவமனையில் பிறந்ததாகக்கூறி எனக்கு உதவித்தொகை வழங்க மறுத்துவிட்டனர். ஆனால் இவர்கள் கூறுவது பொய். முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பிரசவம் நடைபெற்று அவர்கள் தந்த குழந்தைக்கான பிறந்த சான்று உள்ளது” என்று மருத்துவமனை பிறப்புச்சான்றை காட்டினார் பயனாளி எம்.ரேவதி. இதில் வினோதம் என்னவென்றால் ரூ. 4000 மட்டும் இக்குழந்தைக்காக இவரின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது. மீதித் தொகை கேட்டு அணுகியபோதுதான் இந்த தனியார் மருத்துவமனை என்ற பதில்.
இதேபோல் பிறந்த 2 குழந்தைகளுக்குமே உதவித்தொகை கிடைக்காத சத்யா, முதல் குழந்தைக்கு ரூ 12,000 கிடைத்து தற்போது 2 வயது ஆன இரண்டாம் குழந்தைக்கு இதுவரை பணம் கிடைக்கவில்லை எனக் கூறும் பரந்தாமன் என்பவரின் மனைவி ஷீலா, பிப்ரவரி 2015 ல் பிறந்த முதல் குழந்தைக்கு ரூ.8000, ஜூன் 2017 ல் பிறந்த 2ஆவது குழந்தைக்கு ரூ 4000 என குறைவான உதவித்தொகை மட்டும் வங்கிக் கணக்கில் வரவு வந்துள்ள ஓம்பிரகாஷ் என்பவரின் மனைவி ஜெயமேரி… என ஏமாற்றப்பட்டோரின் பட்டியல் நீள்கிறது. இந்த எலவனாசூர்கோட்டை மருத்துவமனையின் எல்லைக்குள் உள்ள பல கிராமங்களிலும் உள்ள ஏராளமான தாய்மார்களின் வேதனைக்குரலாகவும் இது உள்ளது.
நாம் மருத்துவமனை வட்டாரத்தில் விசாரித்தபோது அரசு பணம் ஒதுக்குவதில் தாமதம் ஏற்படுவதாக சொல்லப்படுகிறது. ஆனால் ஒரு பயனாளிக்கு பணம் கொடுக்கப்பட்டதாக கணக்கில் உள்ளது. இந்தப் பணம் பல மாதங்களாக பயனாளி வங்கிக் கணக்கில் செலுத்தப்படவில்லை. உண்மையிலேயே இந்த உதவித் தொகையைப் பெற பல பயனாளிகள் இதில் 4 இல் ஒருபகுதி பணம் (கையூட்டு) செலவழித்துள்ளதாகவும் கூறுகின்றனர். விழுப்புரம் மாவட்டத்திலும், தமிழகம் முழுவதிலும் இதற்கென தனி விசாரணை நடத்தினால் பலகோடி ரூபாய் பயனாளிகளின் பணம் சூறையாடப்பட்டுள்ளது வெளிவரும். கூடவே நிர்வாகம் செய்வோரின் மறுபுறமும் கூட.
“நாணமில்லாதவனுக்கு நாலுபக்கம் வாசல்படி” என்பதைப்போல தமிழக அதிமுக அரசு எந்தக் கட்டுப்பாடுமில்லாமல் உள்ளது என சமூக ஆர்வலர்கள் குற்றம் சுமத்துகின்றனர். பல்வேறு துறைகளில் முறைகேடுகள் நடைபெற்றாலும் அதனைக் கண்டு கொள்ளாமல் மேலும் நடைபெற ஊக்கமூட்டுவதுபோல அமைதியாய் உள்ளது அரசு. பகட்டு விளம்பரங்களால் அனைத்தையும் மூடி மறைக்க முடியாது என்பதை அவ்வப்போது மக்கள் உணர வைத்துக் கொண்டுதான் உள்ளார்கள்.
- வி.சாமிநாதன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக